இலங்கை போக்குவரத்து சபையில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கணினி கொள்வனவின் போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 89 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவு செய்யப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.
இலங்கை போக்குவரத்து சபை 2018 ஆம் ஆண்டு 139 கணினிகள், 74 மடிக்கணினிகளை 15,290,000 ரூபாவுக்குக் கொள்வனவு செய்வதற்கு கொள்முதல் சபை மதிப்பீடு செய்திருந்த போது, இத்தொகையைவிட அதிகமான தொகைக்கே கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய 800 கணினிகளும், 47 மடிக்கணினிகளும் 113,303,750 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதனால் 2018 ஆம் ஆண்டு கணினிகளின் கொள்வனவுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையை விட 89,977,500 ரூபா போக்குவரத்து சபையின் கணக்கின் ஊடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழுக் கூட்டத்தில் வெளிப்பட்டது.
இலங்கை போக்குவரத்துச் சபை தொடர்பான 2017, 2018ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு (06) கூடிய போதே இந்த விடயம் வெளிப்பட்டது.
உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் இந்தத் தொகை செலவு செய்யப்பட்டமை குறித்து கோப் குழுவின் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அத்துடன், அப்பாவி ஏழை மக்களுக்குச் சேவையாற்றுவதற்குள்ள இதுபோன்ற நிறுவனம் இவ்வாறு நிதியை செலவு செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன், 125 சொகுசு பஸ்களுக்கு கெமரா மற்றும் ஜீ.பி.எஸ் கட்டமைப்பைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளைக் கொள்வனவு செய்ய தனியார் நிறுவனத்துடன், 33,628,840 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்தக் கருவிகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை இயங்கும் நிலையில் காணப்படவில்லை என்றும் கோப் குழுவில் தெரியவந்தது.
விசேடமாக இந்த பஸ்களில் பணியாற்றுபவர்கள் வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், விசாரணைகள் முடிவடைந்ததும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த நிறுவனத்துடனான சேவைக்காலம் முடிவடையாவிட்டால் இயங்க முடியாத நிலையில் உள்ள உபகரணங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குழு அதிகாரிகளுக்குத் தெரிவித்தது.
அத்துடன், 2018 டிசம்பர் 24ஆம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட 150,000,000 ரூபா வங்கிக் கடன்தொகை, நிதி அமைச்சரின் ஒப்புதலுடன் பெறப்பட்டிருக்க வேண்டியுள்ள போதும், அமைச்சரின் அனுமதி பெறப்படாமை குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
இவ்வாறானதொரு கடன்தொகை ஒரு சில அதிகாரிகளின் விருப்பத்துக்கு அமைய பெற்றுக்கொள்ள முடியாது என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
2017, 2018, 2019, 2020 ஆகிய வருடங்களுக்கான வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமை குறித்தும் கோப் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இக்காலப் பகுதியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும், 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் அச்சிடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்த சகல அறிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு பணிப்புரை விடுத்தது.
2018 ஆம் ஆண்டு கொள்முதல் திட்டத்துக்கு அமைய 1,000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களுக்கு 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிப்பாளர் சபையின் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. இருந்த போதும் 2018ஆம் ஆண்டு 2,000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய 75,900,000 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய அனுமதி இன்றி 1,000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதுடன், இந்தக் கொள்வனவின் ஊடாக எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறாமை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது. இது தொடர்பில் ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.
அத்துடன், பணிப்பாளர் சபையின் பதவிகள் சிலவற்றின் குறைபாடுகள் குறித்தும், பயன்பாட்டில் இருக்கும் 5,921 பஸ்களின் எண்ணிக்கை தொடர்பிலும், தற்பொழுது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் 10 வருடங்கள் பழைமை வாய்ந்த 2,742 பஸ்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கோப் குழுக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த ஆகியோரும், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். சில அதிகாரிகள் ஒன்லைன் முறையின் ஊடாக இக்கூட்டத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.