பொதுவாகவே ஆண்கள் ஆனாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களை அழகுப்படுத்திக் கொள்வதை விரும்புவார்கள்.
அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் சற்று அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பது இயற்கை தான்.
முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதிலேயே பொதுவாக அனைவரும் கவனம் செலுத்துகிறோம், ஆனால் முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்கள் பற்றி அவ்வளவு கவனம் எடுப்பதில்லை.
ஆனால் உண்மையில் முகத்தை விட கண்களுக்கே ஈர்க்கும் தன்மை அதிகம், கண்களை அழகாக காட்ட வேண்டும் என்றால் புருவங்கள் நேர்த்தியாக இருக்க வேண்டும்.
புருவங்களை பராமரிப்பது ஒரு கலை
எவ்வளவு அழகான கண்களை கொண்டிருந்தாலும் புருவங்கள் நேர்த்தியாகவும் அடர்த்தியாகவும் இல்லாவிட்டால் அந்த கண்களுக்கு ஈர்ப்பும் கவர்ச்சியும் இருக்காது.
அப்படி முக்கியம் வாய்ந்த புருவங்களை எப்படி பராமரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.
புருவங்களை நாம் ட்ரிம் செய்யும் போது நம் முகத்தின் வடிவத்துக்கு பொருந்தும் வகையில் ட்ரிம் செய்ய வேண்டும்.
புருவங்கள் சிலருக்கு அடர்த்தியாக இருக்கும் சிலருக்கு மெல்லியதாக இருக்கும் மெல்லிய புருவத்தை உடையவர்கள் புருவத்தை வரையும் போது கருப்பு நிற பென்சிலை பயன்படுத்த கூடாது. பதிலான பிரவுன் நிறத்தை பயன்படுத்தும் போது புருவங்கள் மிகவும் இயற்கையாக தோற்றமளிக்கும்.
தினமும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் விளக்கெண்ணெய் சிறிதளவு புருவங்களுக்கு தடவி வர ஒரே வாரத்தில் புருவங்கள் நன்கு அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.
அடிக்கடி புருவங்களுக்கு வைட்டமின்-ஈ தடவி வருவதும் நல்ல பலனை கொடுக்கும். இதன் மூலம் புருவங்கள் அடர்த்தியாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும்.
தினசரி ஒப்பனை செய்து கொள்ளும் பெண்கள், அதனை நீக்கும் போது தேங்காய் எண்ணெய் கொண்டு நீக்குவது புருவங்களை பாதுகாப்பதுடன் புருவங்களின் நேர்த்தியை பேணவும் உதவியாக இருக்கும்.