மாதா, பிதா, குரு, தெய்வம் என பெற்றோருக்கும் மேல் குருவை வைத்திருக்கின்றனர். குரு – சிஷ்யன் உறவு என்பது மிகவும் புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனினும் அந்த குரு – சிஷ்யன் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிவலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
சமீப நாட்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் குறித்தும், பயிற்சிக்கு வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர்கள் குறித்தும் செய்திகள் வெளியாகி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெண் வகுப்பாசிரியர் ஒருவர் தன்னிடம் படித்த மைனர் மாணவர் ஒருவருடன் மாயமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் டியூஷனும் எடுத்து வந்துள்ளார். அவர் பணியாற்றி வந்த பள்ளியில் வகுப்பாசிரியாக இருக்கும் அவரிடம், பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படிப்பதற்காக தேஸ்ராஜ் காலணியில் உள்ள ஆசிரியையின் வீட்டிற்கு தினமும் அவரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த 27ம் தேதி மதியம் 2 மணிக்கு எப்போதும் போல டியூஷனுக்கு சென்ற மாணவர் வீடு திரும்பாததால் கவலையடைந்த மாணவரின் பெற்றோர் டியூஷன் ஆசிரியை வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். ஆரம்பத்தில் எதையும் கூறாத ஆசிரியையின் பெற்றோர் சிறிது நேரம் கழித்து ஆசிரியை, மாணவர் இருவரும் மாயமானது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல் விசாரணை அதிகாரி ராணா பிரதாப் இது தொடர்பாக கூறுகையில், இருவரின் மொபைல் போன் இருப்பிடத்தை கண்டறிய முயற்சிக்கிறோம், ஆனால் இருவரின் போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது என்றார். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது இருவரையும் பிடித்து விடுவோம் எனவும் கூறினார்.
அதே நேரத்தில் மாயமான இருவரும் தங்கள் வீட்டில் இருந்து பணம், நகை போன்ற எதையும் எடுத்துச் செல்லவில்லை, ஆசிரியை கையில் ஒரு தங்க மோதிரம் மட்டும் அணிந்திருக்கிறார். மைனர் சிறுவனை கடத்தியதாக ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக அதிகாரி ராணா பிரதாப் கூறினார்.
இது குறித்து மாணவரின் பெற்றோர் கூறுகையில், 17 வயதாகும் தங்கள் மகன் வகுப்பாசிரியையான அவரின் டியூஷனுக்கு கடந்த 2 – 3 மாதங்களாக சென்று வந்தார். லாக் டவுன் காலத்தில் தினமும் 4 மணி நேரம் அவனுக்கு ஆசிரியை டியூஷன் எடுத்து வந்தார் என தெரிவித்தனர்.
27 வயதுடைய அந்த ஆசிரியை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டு அவரின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.