ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது.
உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் ஒமிக்ரோன் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் ஒமிக்ரோன் கொரோனா பரவல் நிலைகள் குறித்து புதன்கிழமை பேசும்போது ஒமிக்ரோன் கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட இறப்புகள் பதிவாகாததைக் குறிப்பிட்டார்.
மேலும் இதுவரை 57 நாடுகளில் ஒமிக்ரோன் கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒமிக்ரோன் கொரோனா பரவல் தீவிர உடல் நல பாதிப்பை ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை குறித்து அறிய கூடுதல் காலமாகலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.