ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
ஜப்பானின் நிஷின் (Nisshin) நகரில் இன்று (1) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி 38 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சஹான் ஆரச்சிகே மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இலங்கை அணி சார்பில் நுவனிது பெர்னாண்டோ அதிகபட்சமாக 15 ஓட்டங்களைப் பெற்றார். தொடக்க வீரர்களான சினேத் ஜயவர்தன, லசித் க்ரூஸ்புள்ளே, சொஹான் டி லிவேரா உட்பட 5 வீரர்கள் ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை அணி 9.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் பட்டேல் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற இந்திய அணி தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

