41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணையை, குறித்த சம்பவத்தின் கடுமையான விளைவுகள், குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான அதன் தாக்கத்தை மேற்கோள் காட்டி, இந்திய உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (13) மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றியது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜே மகேஸ்வரி, இந்த சோகம் “தேசிய மனசாட்சியை உலுக்கியுள்ளதாக” கூறினார்.
மேலும் அனைத்து தரப்பினரின் கவலைகளையும் போக்க முழுமையான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
சிபிஐ விசாரணையை கண்காணிக்கவும் மீள்பரிசீலணை செய்யவும் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழுவிற்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார்.
மேலும் இரண்டு மூத்த பொலிஸ் அதிகாரிகள் இதில் இடம்பெறுவார்கள்.
கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான எந்தவொரு விடயத்திலும் இந்த குழு விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
சிபிஐ, மாதாந்திர விசாரணை அப்டேட்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 27, அன்று தமிழ்நாட்டின் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் (TVK) பேரணியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதன் விளைவாக ஒன்பது குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிபிஐ விசாரணை கோரி டிவிகே தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதி சோகத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.