கடந்த வாரத்தை விட, நேற்று (29ம் திகதி) காய்கறிகளின் மொத்த விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தம்புள்ளை மொத்த சந்தைக்கு வழங்கப்படும் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலையும் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்நாட்களில் மொத்த காய்கறி வாங்குவோர் தொகையும் குறைந்துள்ளது. நேற்று (29) தம்புள்ளை மொத்த சந்தைக்கு சுமார் 800,000 கிலோ மரக்கறிகள் கிடைத்துள்ளதாகவும், மீகொட, வெயங்கொட மற்றும் வெலிசறை பொருளாதார நிலையங்களில் இருந்து மொத்த கொள்வனவாளர்கள் சுமார் 150,000 கிலோ மரக்கறிகளை கொள்வனவு செய்ததாகவும் தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் வர்த்தக சங்கத்தின்தலைவர் சாந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பச்சை மிளகாய், கறி மிளகாய், பீன்ஸ் மற்றும் லீக்ஸ் ஆகியவற்றின் விலைகள் சுமார் 50% அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் பயிர்கள் சேதம் அடைந்ததன் காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி நேற்று (29ம் திகதி ) நடந்த மொத்த விற்பனை விலையின்படி பீன்ஸ் 350 – 375 ரூபாய், பச்சை மிளகாய் 350 – 360 ரூபாய், கறி மற்றும் மிளகாய் 370 – 400 ரூபாய், வெண்டைக்காய் 250 – 300 ரூபாய், கேரட் 250 – ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுதவிர வெள்ளரி ரூ.70-75க்கும், பூசணிக்காய் ரூ.60-65க்கும் விற்கப்பட்டது.
மலையகம், வடமேற்கு, யாழ்ப்பாணம் மற்றும் ஊவா பிரதேசங்களில் இருந்து பெறப்படும் அனைத்து வகையான மரக்கறி வகைகளின் மொத்த விலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, உள்ளூர் உருளைக்கிழங்கு 250 – 260 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 150 – 160 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்பட்ட பெரிய உருளைக்கிழங்கு 95 – 105 ரூபா வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.