நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் 3330 ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை பிரதமரின் தலைமையில் இன்று (12) அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டது.
1980 மற்றும் 1982 ஆண்டுக்கு அடைப்பட்ட காலப்பகுதியில் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களில் 10 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலத்தையுடைய ஊழியர்களுக்கு, அவர்களது வாழ்நாள் முழுவதும் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு பெற உரிமை உண்டு.
இந்த மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைக்கு அமைய குறியீட்டு ரீதியாக, சில ஊழியர்களுக்கு பிரதமரினால் காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது.
2020 ஜுலை 15 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்ட முடிவிற்கமைய, இந்த மாதாந்த கொடுப்பனவை வழங்க பொது திறைசேரியிலிருந்து புடவை கைத்தொழில் திணைக்களத்திற்கு ரூ .95 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஓய்வூதிய இழப்பாளர்கள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜே.எம். பிசோமெனிகே, அரசாங்கத்தின் இந்த தீர்மானம் குறித்த விரிவான அறிக்கையை பிரதமரிடம் வழங்கிவைத்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் தான் தொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியிலிருந்து அவதானம் செலுத்திவந்த ஒரு பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வு பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளாக இப்பிரச்சினை நீடித்தது. பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் எவ்வித பிரச்சினையும் இன்றி இச்செயலை நிறைவேற்றியுள்ளது. அது தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இப்பிரச்சினையால் நாம் இன்றைய நாளளவில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தோம். அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, விமல் வீரவன்ச உள்ளிட்ட இவ்விடயம் தொடர்பாக தலையீடு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அரச சேவையில் ஓய்வூதிய இழப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.பிசோமெனிகே தெரிவித்தார்.
இவர்கள் காலகள் உடையும் வரை அரசியல்வாதிகளிடம் சென்றிருப்பார்கள். நாம் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியிலும் இது தொடர்பில் கலந்துரையாடினோம். இவர்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். எதிர்வரும் 28ஆம் திகதியளவில் இந்த காசோலைகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்க்கிறோம். அதனை தொடர்ந்து இந்த கொடுப்பனவு அவர்களது வங்கிக் கணக்கில் இடப்படும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மாதாந்த கொடுப்பனவை பெற்றுக்கொண்ட ஊழியர் ஒருவர் இதன்போது கௌரவ பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை வாழ்த்தி கவிதையொன்றை பாடியிருந்தமை விசேட அம்சமாகும்.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, புடவை கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திமுது குலதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.