ஏற்கனவே டெல்டா வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது லாம்ப்டா என பெயரிடப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸும், தீவிரமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் பிடியில் இருந்து இன்னமும் நாம் மீளவில்லை என்பதை உணர்த்தும் வகையில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் குறித்து தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
உருமாற்றமடைவது வைரஸ்களின் பண்பு என்றாலும் கூட சில மரபணு மாற்றங்கள் வைரஸ்களை மேலும் வீரியமடைய செய்கின்றன. அப்படி இந்தியாவில் உருமாற்றமடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி அச்சுறுத்தி வருகிறது. தற்போது நாம் அஞ்ச வேண்டிய வைரஸ்களின் பட்டியலில் புதிதாக லாம்ப்டா வகை கொரோனா வைரஸும் இணைந்துள்ளது.
பெரு நாட்டில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு லாம்ப்டா என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க இவ்வகை வைரஸே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
பெருவில் தொற்றுக்கு ஆளான 80 விழுக்காடு மக்களுக்கு லாம்ப்டா வகை வைரஸ் பரவி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30 நாடுகளில் லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. அண்மையில் உலக சுகாதார நிறுவனம், லாம்ப்டா வகை கொரோனா வைரஸை VARIANT OF INTEREST பிரிவில் சேர்த்திருக்கிறது. அதாவது தீவிரமாக கண்காணிக்க வேண்டிய வைரஸ் என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் குறித்த ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தற்போதைக்கு இதன் ஸ்பைக் புரோட்டினில் 7 முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பது அறியப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலின் வேகம் , தீவிர பாதிப்பை உண்டாக்குமா , தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை லாம்ப்டா கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை.
எனினும் இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து மீண்டிருக்கும் வேளையில், வரும்முன் காப்பதே சிறந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் இவை மட்டுமே கொரோனாவை தடுக்க நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் என்பதை மறந்துவிட கூடாது.