கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பாடசாலை மாணவியான தோழியை வாக்குவாதத்தின் இடையே 250 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த மேலுகாவு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (23) என்பவரும் இதே பகுதியை சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவியும் நட்பாக பழகி வந்துள்ளனர்.இந்த நிலையில் வியாழக்கிழமை பகல் 8 மணியளவில் இருவரும் நாடுகாணிசுரம் என்ற மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
இருவரும் மலை முகட்டில் இருந்து பேசிக்கொண்டிருந்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அலெக்ஸ் தமது தோழியை சட்டென்று தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.சுமார் 250 அடி பள்ளத்தில் விழுந்த மாணவி, சுய நினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். ஆனால் அவரை காப்பாற்றும் நோக்கில் கீழே இறங்கிச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இரத்தவெள்ளத்தில் கிடந்த மாணவி, பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதால், இறந்து விட்டதாக கருதிய அலெக்ஸ், அங்கிருந்த மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதனிடையே, அலெக்ஸ் மற்றும் மாணவியை காணவில்லை என குடும்பத்தினர் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளனர்.
மட்டுமின்றி, பொலிஸ் விசாரணையில் நாடுகாணி பகுதியில் அலெக்ஸ் பயன்படுத்திய இருசக்கர வாகனம் இருப்பதை அறிந்தனர்.இந்த நிலையில் குளமாவ் பொலிசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், படுகாயத்துடன் மாணவி உயிருக்கு போராடுவதை கண்டறிந்து, உடனடியாக அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மட்டுமின்றி, மரக்கிளையில் தூக்கிட்ட நிலையில் கிடந்த அலெக்ஸின் சடலத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர்.பள்ளத்தில் விழும்போது பாறைகளில் அங்குமிங்கும் மோதியதால் கால் மற்றும் இடுப்பு எலும்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,
ஒரு இரவு முழுவதும் வன விலங்குகள் நடமாடும் பகுதியில் அவர் உயிருக்கு போராடியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.இது காதல் விவகாரமா அல்லது வெறும் நட்பு தானா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.