21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் முயற்சியில் பசில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பசில் ராஜபக்ச பெற்றுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் 21 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அதேவேளை 21வது திருத்தம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனான ஆலோசனையின் பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் நாளை விவாதிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை பெறுவதற்காக அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசவட்டாரங்கள் தெரிவித்தன.
அதேவேளை புதிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவே 21 வது திருத்தத்தை வடிவமைக்கும் நடவடிக்கைகளில் முக்கியமாக ஈடுபட்டுள்ளார், அதற்காக அவர் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவர்களின் கருத்தினை பெற்றுவருகின்றார்.
அத்துடன் 21வது திருத்தத்தின் நகல்வடிவம் இறுதி ஆவணமில்லை அது திருத்தத்திற்கு உட்படக்கூடியது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.