2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது.
2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
160 அடி விட்டம்
கடந்த பெப்ரவரி 2 ஆம் திகதி இவ்விண்கல் முதன்முதலில் அவதானிக்கப்பட்டது. இது 160 அடி (48.7 மீற்றர்) விட்டமுடையதாக இருந்தது என நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பூமியிலிருந்து 18 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில், ஒரு விநாடிக்கு 24.64 கிலோமீற்றர் வேகத்தில் இது பயணிப்பதாகவும், 271 நாட்களுக்கு ஒரு தடவை பூமியை சுற்றிவருகிறது எனவும் நாசா தெரிவித்துள்ளது.
இவ்விண்கல் பூமியில் மோதுவதற்கான நிகழ்தகவு 625 இற்கு 1 என உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்தகவு 560 : 1 என நாசா தெரிவித்துள்ளது.
பூமியில் விண்பொருட்கள் மோதக்கூடிய சாத்தியங்கள் குறித்து விளக்குவதற்கு டுரீனோ அளவுகோலை நாசா பயன்படுத்துகிறது. 1 முதல் 10 வரையான நிலைகள் இந்த அளவு கோலில் உள்ளன.
தற்போது மேற்படி 2023 DW விண்கல் மாத்திரமே இந்த அளவுகோலின்படி 1 எனும் நிலையில் உள்ளது. ஏனைய அனைத்துப் பொருட்களும் ‘பூச்சியம்’ எனும் நிலையிலேயே உள்ளன.
இந்த அளவுகோலின்படி, 1 என்பது இது பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதாகும். இது குறித்து பொதுமக்கள் அவதானம் அல்லது கரிசனை கொள்வதற்கு காரணமில்லை என்பதாகும் என நாசா கூறுகிறது.
அதேவேளை, 2023 DW விண்கல்லை தொடர்ந்து அவதானித்து பெறப்படும் தரவுகளின் மூலம், இவ்விண்கல் பூமியுடன் மோதுவதற்கான நிகழ்தகவு மாற்றமடையலாம் எனவும் நாசா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதிய பொருட்கள் முதலில் கண்டுபிடிக்கப்படும் போது, அவற்றின் எதிர்கால சுற்றுப்பாதையை போதுமானளவு எதிர்வுகூறுவதற்கு பல வாரங்களுக்கான தரவுகள் தேவைப்படும் என நாசா தெரிவித்துள்ளது.