2022 ஆண்டுக்குள் இலங்கை புதிய பொருளாதார பாதையில் பயணிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நேற்று (01) மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 6 மாதங்களுக்கான மத்திய வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.
இதுதெடார்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இவ்வருட முடிவில் 5 சதவீதமாகவும் 2022 இன் முதற்காலாண்டில் 6.5 சதவீதமாகவும் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், NRFC மற்றும் RFC கணக்குகள் தொடர்பில் எந்தவொரு பீதியும் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.
இந்த கணக்குகள் தொடர்பில் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்துவது அரசாங்கத்தினதோ, இலங்கை மத்திய வங்கியினதோ அபிப்பிராயம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர் ,குறித்த கட்டமைப்பின் கீழ் முதலீடு செய்த எவருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. அந்த நிதி பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
வெளிநாடுகளில் இருந்து நிதியை அனுப்பும் போது இலங்கையிலுள்ள பொதுவான வங்கிக் கட்டமைப்பைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
கொவிட் தொற்றின் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக 15,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய மத்திய வங்கி தீர்மானித்திருப்பதாக தெரிவித்த அவர் ,அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் ஏற்றுக்கொள்ளல் நியதிகள் தொடர்பான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசர தேவையற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட 100% எல்லை வைப்புத் தொகை கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்படுவதாகவும் கூறினார்.
இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி, மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் 100% நிதி வைப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, குறித்த குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுமாறு தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மற்றும் செலாவணி வெளியேற்றத்தினை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 6 மாதங்களுக்கு மிகையான இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டாமென இறக்குமதியாளர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலத்தில் ´ஆசியாவின் ஆச்சரியம்´ என்றும் ´ஆசியாவின் அடுத்த அதிசயம்´ என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மறையான துலங்கலைக் காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புக்கள் உரியவாறான அங்கீகாரத்தைப் பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்பட வேண்டியவையாகும். குறிப்பாக கொவிட் – 19 சௌபாக்கிய மீள்நிதி வழங்கல் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கென இரண்டாயிரத்து 2 பில்லியன் ரூபாவும் மத்திய வங்கியினால் ஒதுக்கப்பட்டது.
எனினும் இவ்வாறான சவால்களின் போது அரசாங்கமோ அல்லது மத்தியவங்கியோ மாத்திரம் தனித்துச்செயற்பட்டு, அதனை வெற்றிகொள்ள முடியாது. மாறாக வங்கிக் கட்டமைப்புக்கள், வங்கியல்லாக் கட்டமைப்புக்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், சேவை வழங்குனர்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.