யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு திட்டங்களை தாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் -வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 224 வருடங்கள் பழைமை வாய்ந்த தபால் சேவை மக்களின் அவசியமான சேவையாக காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும் 2010 ற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
2009 ற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணமான அரசியல் காரணங்கள் பற்றி நான் இங்கே குறிப்பிடவிரும்பவில்லை. யுத்தம் முடிவடைந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்.
‘சுபிட்சத்தின் நோக்கு’ என்ற எமது அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் வடபகுதியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.
கொரோனா காலத்திலும் கூட தபால் சேவை, மிகவும் சிறப்பாக செயற்பட்டது. அந்த வைரஸ் தொற்று காலத்திலும் கூட எமது தபால் ஊழியர்கள் தமது கடமையை சிறப்பாக செய்து நாட்டில் சேவையாற்றியிருந்தனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாணம் பிரதேசத்தை பொருத்தவரை விவசாயம், கல்வி உயர் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளே மிகமுக்கியமான துறையாக காணப்படுகின்றன. அத்துடன் அந்த துறைகளை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.
மேற்குறிப்பிட்ட துறைகளை ஒன்றிணைத்து முன்னோக்கி செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது இந்த தபால் துறை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு இணைப்புக் கருவியாகவே நான் தபால் துறையை காண்கிறேன்.
எம்மைப் பொருத்தவரை வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமதுஅரசாங்கம் மிகவும் ஆர்வமாக செயற்படுகிறது. தபால் துறையை நவீனப்படுத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 224 வருடங்கள் பழமை வாய்ந்த தபால் துறையை நவீனமயப்படுத்தி தபால் துறைக்குள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்கிறோம்.
உலக நாடுகளிலுள்ள தபால் துறையை போன்று நமது நாட்டிலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட வகையில் எமது நாட்டின் தபால் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கிலுள்ள எமது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் எப்போதும் ஒத்துழைப்போமென தெரிவித்தார்.