குஜராத் தொழிலதிபர் ஒருவர், தனது இரண்டு மாத மகனுக்கு, நிலாவில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிப் பரிசளித்து அசத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த விஜய் கேத்ரியா என்பவர், தனது இரண்டு மாத மகனுக்கு, நிலாவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கிப் பரிசளித்துள்ளார். இளம்வயதிலேயே நிலவில் இடம் வைத்திருக்கும் பெருமை அக்குழந்தைக்குக் கிடைத்துள்ளது. கண்ணாடி வர்த்தகரான கேத்ரியா, சர்வதேச லூனார் லேண்ட் நிறுவனத்தின் உதவியின் மூலம், நிலத்தை புக் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய கேத்ரியா, “என் மகன் நித்யா பிறந்தவுடனே, ஸ்பெஷலாகப் பரிசளிக்க வேண்டும் என விரும்பியதால் நிலாவில் இடத்தை வாங்க முடிவுசெய்தேன்
நியூயார்க் சர்வதேச லூனார் லேண்ட் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு நிலாவில் நிலத்தை வாங்க அனுமதி கோரினேன். அவர்களும் விரைவாக ஆவணங்களைச் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொண்டு, எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மின்னஞ்சல் அனுப்பினர்” எனத் தெரிவித்தார்.
ஷாருக்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற பாலிவுட் நடிகர்களும் நிலவில் நிலம் வாங்கியிருக்கின்றனர். சுஷாந்த் நேரடியாகத் தாமே நிலம் வாங்கியிருக்கிறார். ஷாருக்கானுக்கு வேறொருவர் இந்த நிலத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
அதேபோல், கடந்தாண்டு ராஜஸ்தானில் மனைவிக்குப் பரிசாக மூன்று ஏக்கர் நிலத்தைக் கணவர் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 1967ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, நிலாவில் நிலம் வாங்குவது அல்லது விற்பது சட்டவிரோதமானது. இதனை இந்தியா உள்பட மொத்தம் 104 நாடுகள் ஒத்துக்கொண்டன.
ஏராளமான ஆன்லைன் வலைதளங்கள் நிலாவில் உள்ள இடத்தை விற்பனை செய்கின்றன. அதற்குச் சான்றிதழ் வழங்கியிருந்தாலும், பூமிக்கு வெளியில் உள்ள இடத்தை யாராலும் உரிமை கோர முடியாது என்றுதான் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்