இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் சடலத்தை தனி ஆளாக சுடுகாட்டில் வைத்து மனைவி தகனம் செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் ஹரிகாண்ட் ராய் (45). இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று உயிரிழந்தார். இதன் பின்னர் அவர் சடலம் மருத்துவமனையில் பிணவறையில் 18 மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராய்க்கு இறுதிச்சடங்கு நடத்த உடன் வந்து உதவுமாறு அவர் மனைவி தேவி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உதவி கேட்டார். ஆனால் கொரோனா அச்சத்தால் யாரும் உதவ முன் வரவில்லை.
பிறகு சமூக செயற்பாட்டாளர் கபீர் சிவா என்பவர் தேவியின் நிலையை அறிந்து உதவ முன் வந்தார். பின்னர் ராயின் சடலம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு கொரோனா பாதிக்காதவாறு உடுத்தி கொள்ளும் பிபிடி உடையை தேவி உடுத்தி கொண்டார். இதன் பின்னர் உறவுகள் யாரும் இன்றி தனி ஆளாக கணவருக்கு இறுதிச்சடங்கு செய்து சிதைக்கு எரியூட்டி தகனம் செய்தார். சிதை எரிந்து கொண்டிருந்ததை தொடர்ந்து கதறி அழுதபடி தேவி இருந்தார். உயிரிழந்த ராய்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என தெரியவந்துள்ளது.