மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் தனது ஒன்றுவிட்ட 14 வயது சகோதரி ஒருவரை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 25 வயது இளைஞன் மடுல்சீமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அச்சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரை கைது செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமிக்கு நோய் ஏற்பட்டதையடுத்து, அச்சிறுமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளையில், அச் சிறுமி மூன்று மாத கர்ப்பிணியென்று தெரிய வந்துள்ளது.
இதனை சிறுமியின் தாய் அறிந்து, அச்சிறுமியை ஹொப்டன் பெருந்தோட்டத்தில் தமது உறவினர் வீடொன்றில் மறைத்து வைத்திருந்தார்.
இந்நிலையில்,சிறுமி கர்ப்பிணியாகிய விடயம், பிரதேச குடும்பநல தாதி அறிந்து, மடுல்சீமை பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவிற்கு புகார் செய்துள்ளார்.
இதையடுத்து மடுல்சீமை பெண் பொலிசார் ஹொப்டன் தோட்டத்துக்குச் சென்று, சிறுமியிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன் குறித்த தகவல் கிடைக்கப்பெற்று, அவ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இதைத் தொடர்ந்து சிறுமியை மறைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணியான சிறுமி தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெற சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன், விசாரணையின் பின்னர் பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.