இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டதை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.
இது நாட்டின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு முக்கிய படியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க,
அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்டார்லிங்க் அணுகலை அனுமதித்ததற்காக பில்லியனர் எலோன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்தார்.
ஸ்டார்லிங்க் அறிமுகம் குறித்த செய்தியை புதன்கிழமை (02) அதிகாலை எலோன் மஸ்க் உறுதிப்படுத்தினார்.
இந்த சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளது என்று அவர் அறிவித்தார்.
இந்த முயற்சி நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அதிவேக இணைய அணுகலை விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து, இது 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு, பயனர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற இணைய அணுகலை வழங்கும்.
தற்போது, இந்த செயற்கைக்கோள்களில் 7,000 க்கும் மேற்பட்டவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் 12,000 ஆகவும், எதிர்காலத்தில் 30,000க்கும் அதிகமாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவிறக்க வேகம் 50mbps – 250mbps வரை இருக்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறுகிறது.