வேலை முடிவடைந்து தனது வீடு நோக்கித் துவிச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதியின் பெறுமதியான தங்கச் சங்கிலி சுன்னாகம் கந்தரோடை உபாத்தியாயர் வீதியில் இன்று பிற்பகல் அறுக்கப்பட்ட நிலையில் சுன்னாகம் பொலிஸாரின் உடனடி நடவடிக்கையால் அறுக்கப்பட்ட சங்கிலி சம்பவ இடத்திலிருந்து மீளவும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் சந்தியில் அமைந்துள்ள பான்சி நிலையமொன்றில் வேலை பார்த்து வரும் குறித்த இளம் பெண் தனது வழமையான வேலையை நிறைவு செய்து விட்டு கந்தரோடை மேற்கில் அமைந்துள்ள தனது வீடு நோக்கித் துவிச்சக்கர வண்டியில் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது இச் சம்பவம் நடந்துள்ளது. கந்தரோடை உபாத்தியாயர் வீதியால் சென்று கொண்டிருந்த போது குறித்த யுவதியின் பின்னால் மோட்டார்ச் சைக்கிளில் ஹெல்மெற் அணிந்து, தமது முகங்களை முகக் கவசங்களால் மறைத்தவாறு வந்த மூன்று பேர் வந்துள்ளனர். அவர்களில் மோட்டார்ச் சைக்கிளின் பின் இருக்கையில் இறுதியாக அமர்ந்திருந்தவன் சடுதியாக குறித்த யுவதியின் சங்கிலியை அறுத்துள்ளான்.
இதனைச் சற்றும் எதிர்பாராத குறித்த யுவதி உரத்து அவலக் குரல் எழுப்பியவாறு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து தனது அக்காவையும், அவரது கணவரையும் அழைத்துக் கொண்டு சென்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட யுவதி முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த யுவதியின் முறைப்பாட்டை ஏற்று உடனடியாகச் சம்பவ இடத்திற்குப் பொலிஸார் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட யுவதியிடம் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுமாறு பொலிஸார் வினாவிய நிலையில் யுவதியும் அடையாளம் காட்டியுள்ளார்.
இந்நிலையில் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் அறுக்கப்பட்ட நிலையில் தங்கச் சங்கிலி மீளவும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் குடும்பம் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் யுவதி வேலைக்குச் சென்று கஷ்ரப்பட்டு உழைத்துச் சேர்த்த பணத்திலேயே மேற்படி தங்கச் சங்கிலி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சுன்னாகம் பொலிஸாரின் உடனடி நடவடிக்கையால் களவு போனதாக கருதப்பட்ட தங்கச் சங்கிலி மீளவும் கிடைத்திருப்பது தொடர்பில் யுவதி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மேற்படி யுவதியின் அவலக் குரல் காரணமாகவே அறுக்கப்பட்ட சங்கிலியைத் திருடர்கள் மீண்டும் அவ்விடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் தெரிய வருகிறது.