அமெரிக்காவில் வேலைக்கு சென்ற இடத்தில் அறிமுகமான இரண்டு இளம்பெண்கள், சீக்கிரமாகவே நெருங்கிய தோழிகளாகிவிட்டிருக்கிறார்கள்.
Cassandra Madison (32) மற்றும் Julia Tinetti (31) என்னும் அந்த தோழிகளைப் பார்க்கும் யாரும், அவர்கள் அக்கா தங்கை போலவே இருப்பதாக கூறுவதுண்டு.
ஒரு நாள் தற்செயலாக இருவருமே தங்கள் உடலில் டொமினிக்கன் குடியரசின் கொடியை பச்சை குத்தியிருப்பதை கவனிக்க, ஒரு வேளை உண்மையாகவே நாம் சகோதரிகளாக இருக்கலாமோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது இருவருக்கும். இன்னொரு விடயம், இருவருமே தத்துக்கொடுக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், Cassandraவை தத்தெடுத்து வளர்த்த தாய், 2018ஆம் ஆண்டு, அவருக்கு ஒரு டி என் ஏ கிட்டை பரிசளித்திருக்கிறார்.
அதை வைத்து பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னைப் பெற்ற தந்தையின் பெயர் Adriano Luna Collado என்பதையும், அவர் இன்னமும் டொமினிக்கன் குடியரசில் வாழ்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டுள்ளார் Cassandra.
உடனே தந்தை இருந்த இடத்துக்கு பறந்த Cassandra, முதல் முறையாக தனது தந்தையையும் உடன்பிறந்தவர்களையும் கண்டு மகிழ்ந்துள்ளார்.
அப்போது, தன் தந்தையிடம் தனக்குப் பிறகு யாரையாவது தத்துக்கொடுத்தீர்களா என்று Cassandra கேட்க, அவரும், உனக்குப்பிறகு தங்கை ஒருத்தி பிறந்தாள், ஒன்பது பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த குடும்பத்தில், ஒரு குழந்தை நோய்வாய்ப்பட, வேறு வழியில்லாமல் வறுமையால் இரண்டு குழந்தைகளை தத்துக்கொடுத்துவிட்டோம் என்று கூறியுள்ளார் அவரது தந்தை.
Cassandraவின் தாய் 2015ஆம் ஆண்டே புற்றுநோயால் காலமாகியுள்ளார். தனது குடும்பத்தை சந்தித்த சந்தோஷத்தில் அமெரிக்கா திரும்பிய Cassandra, Juliaவை சந்தித்து விவரங்களைக் கூறி, அவரையும் டி என் ஏ பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சோதனையின் முடிவுகள் எதிர்பார்த்ததுபோலவே Cassandraவும் Juliaவும் அக்கா தங்கைதான் என்று கூற, குடும்பம் ஒன்று சேர்ந்துவிட்ட சந்தோஷத்தில் மூழ்கித்திளைக்கிறார்கள் தோழிகளான அக்காவும் தங்கையும்!