வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கடன், வட்டி மற்றும் கடன் தவணை போன்றவற்றில் இலங்கை மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், பேச்சுவார்த்தை மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைக்கும் நிலையில் நாடு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவது முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதை விட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதேவேளை, வர்த்தக வங்கிகளில் இருந்து இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக மாற்றுவதை 50% இலிருந்து 25% ஆக குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாகவும், மீதமுள்ள 25% வங்கிகள் அத்தியாவசிய இறக்குமதிக்கு பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
உத்தியோகபூர்வ ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் மத்திய வங்கியின் ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே இந்த நிதியானது தேவையின்றி கடனை திருப்பிச் செலுத்துவதற்கு செலவிடப்பட மாட்டாது எனவும், இந்த பணமானது நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.