பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகள் வெளிநாட்டவர்கள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ள நிலையில்,சிலருக்கு சற்றே ஆறுதலளிக்கும் ஒரு செய்தியைக் கூறியுள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலர்.
பிரித்தானியா அறிமுகம் செய்யவிருக்கும் புதிய புலம்பெயர்தல் விதிகளில் ஒன்று, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருவாய் உள்ளவர்கள் மட்டுமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை, அதாவது, கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளைக் கூட, தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் என்கிறது.
இந்த செய்தி தங்களுக்கு கடும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள், பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழ்பவர்கள். அப்படியானால், அவர்கள் பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லியிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதாவது, பிரித்தானியர்களல்லாத தங்கள் குடும்பத்தினருடன் பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் விசாவை புதுப்பிக்கும்போது, அது ஏற்கனவே பிரித்தானியாவில் வாழும் வெளிநாட்டவர்களான குடும்பத்தினரை பாதிக்குமா, அதாவது, 38,700 பவுண்டுகளுக்கு குறைவான வருவாய் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுமா என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜேம்ஸ், இது அடுத்த கட்டம் குறித்த விடயம், அதாவது, எதிர்காலம் குறித்த விடயமேயொழிய பின்னோக்கிச் செல்லும் விடயம் அல்ல என்றார்.
அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்பவர்களை இந்த விதி பாதிக்காது. ஏற்கனவே பிரித்தானியாவில் வாழும் 38,700 பவுண்டுகளுக்கு குறைவான வருவாய் கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நிலை ஏற்படாது என்று கூறியுள்ளார் ஜேம்ஸ். (அப்பாடா, ஜேம்ஸின் தாயும் தப்பிவிட்டார்)!