இந்திய திரையுலகின் முன்னிலை நடிகர் சாருக்கான், கடந்த சனிக்கிழமையன்று, சுவிட்ஸர்லாந்தின் லோகார்னோ திரைப்பட விழாவில் மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera award) விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
எனினும் இதற்கான நிகழ்வின்போது அவரின் செயற்பாடு சமூக ஊடக தளத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், தனியாக புகைப்படத்தில் தோன்ற வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த முதியவர் ஒருவரை தள்ளிய சம்பவம் இந்த விமர்சனத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
சாருக்கானின் இந்த செயலை சமூக ஊடகப்பயனர்கள், உடனடியாகக் கண்டனம் செய்துள்ளதுடன் அவர் “திமிர்பிடித்தவர்” மற்றும் “முரட்டுத்தனம் கொண்டவர்” என்று முத்திரை குத்தியுள்ளனர்.
எனினும் இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட பின்னர், சாருக்கானை சமூக ஊடகங்களில் காப்பாற்றும் வகையிலும் பயனர்கள் பலர் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.