சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் மருதம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களது வீட்டில் தண்ணீர் காயவைக்க மனைவி சசிகலா வாட்டர் ஹீட்டர் தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டுள்ளார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சசிகலா ஹீட்டரை நிறுத்த சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
அவரை காப்பாற்ற சென்ற கணவர் விஜயகுமார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த விஜயகுமார்-சசிகலா தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.