வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியை சேர்ந்த ரவிஷான் மதுரங்க என்ற 19 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புத்தளம் – அனுராதபுரம் ஏ12 வீதியில் பந்துலகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் வரிசையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞரின் மோட்டார் சைக்கிள் கொள்கலன் பாரவூர்தியில் மோதி வீதியில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (23) இரவு தம்புத்தேகமவில் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி வவுனியா செல்வதற்காக மோட்டார் சைக்கிளுக்கு தேவையான பெட்ரோல் பெற்றுக் கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வரிசையில் காத்திருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட உயிரிழந்த இளைஞனின் தந்தை நிமல் பண்டார, “இந்த நாட்டில் வாழ்வது வீண். நமக்கு எதிர்காலம் இல்லை.. இந்த நாட்டில் வாழ்ந்தால் பட்டினியால் சாக வேண்டிய நிலைமை வரும் என கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற மகன் எங்களை விட்டு சென்றுவிட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.