வவுனியாவில் பெட்ரோல் விநியோகத்தில் முதல் கட்டமாக அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதனை வழங்குவதற்கான இணையவழி பதிவுகள் முழுமையாக இடம்பெறும் என மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோக நடைமுறை குறித்து நேற்று மாவட்ட செயலக அதிகாரிகளிடம் மக்கள் வினவிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதற்கான வழிவகைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதல் கட்டமாக அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதன் ஊடாக பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் பெறும் அனைத்து வாகனங்களும் இணையவழியில் பதிவு செய்யப்படுவதுடன் பெட்ரோல் கிடைக்கப்பெறும் அளவு மற்றும் தேவைப்பாடு என்பவற்றுக்கு ஏற்ப எரிபொருள் விநியோக அளவுகளில் மட்டுப்பாடுகள் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முச்சக்கரவண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அவர்களது முச்சக்கரவண்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவதற்கான புதிய நடைமுறை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.
சிறுபோக அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், டீசல் விநியோகம் தொடர்பில் அவசர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இரசேந்திரங்குளத்தின் கீழான பகுதிகளில் அறுவடை ஆரம்பித்துள்ளதால் அவர்களது அறுவடைக்கு தேவையான 3000 லீட்டர் டீசல் விநியோகம் இன்று முதல் இடம்பெறும்.
வவுனியாவில் சிறுபோகத்தில் 12238 ஏக்கர் நெல் செய்கை இடம்பெற்றுள்ளது. வருகின்ற ஜுலை முதல் கிழமையில் இருந்து ஆகஸ்ட் கடைசிக் கிழமை வரை இந்த அறுவடை இடம்பெறும் என எதிர்பார்கின்றோம்.
இதற்காக கிட்டத்தட்ட 3 இலட்சத்திற்கும் மேலதிகமான டீசல் எரிபொருள் தேவைப்படுகிறது. அதனால் இந்த கோளாறுகளை ஒழுங்குபடுத்தி எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிப்பர் முதலான கனரக வாகனங்களுக்கான டீசல் விநியோதகத்தில் மட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.
வவுனியாவில் பதிவு செய்யப்பட்ட தொழில் ரீதியான செயற்பாட்டை முன்னெடுக்கும் கனரக வாகனங்களுக்கு டீசல் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கவுள்ளதுடன் ஏனைய மாவட்ட டிப்பர் போன்ற கனரக வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்படவுள்ளன.
வவுனியாவில் எரிபொருள் விநியோகம் சீராக இடம்பெறுவது குறித்து தொடர்ந்தும் பரிசீலித்து வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.