அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை எனும் பெயருடன் 05.06.2021 அன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுட்பட 14 நாடுகளில் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடநூல் என்பது வரலாற்றுத்திரிபுகளுடன் கூடிய பாடநூல் என்பதை தமிழ் ஆர்வலர்கள் பலர் இனங்கண்டுள்ளனர். ஈழத்தமிழரின் தொன்று தொட்ட வரலாறும், தமிழினம் சந்தித்த இனப்படுகொலை பற்றிய தகவல்களும் திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும் இப் பாடநூல்களில் எழுதப்பட்டிருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட பாடநூல் என்ற பெயரில் வரலாற்றுத்திரிபுகளோடு வெளியிடப்பட்டிருக்கும் பாடநூல்களைப் பல தமிழ்ப்பாடசாலைகள் புறக்கணித்து நிற்கின்றன. அவர்களது கருத்துகளைக் கவனத்திற்கொள்ளாது, போனால் போகட்டும் என்ற மனப்பான்மையில் செயற்படும், புதிதாக உருவாக்கப்பட்ட “அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை” அமைப்பிற்குப் பாடநூல்களில் இடம்பெறவேண்டிய பாடங்கள் பற்றிய சில வேண்டுகோள்களை மக்கள் சார்பாக முன்வைக்கிறோம். அத்துடன் திரிபுபடுத்தப்பட்ட பாடநூல்களை மீளப்பெறுமாறு வலியுறுத்துகிறோம்.
ஈழத்தமிழர் தொன்மை, வரலாறு, மரபு, பண்பாடு, கலாசாரம் பற்றி பாடநூல்களினூடாக எதிர்காலத் தமிழ்ச்சந்ததிக்கு அறிவூட்டல்.
1. தமிழர்களே பூர்வீகக் குடிகள் என்பதை நிரூபிக்கும் தொல்லியல் ஆதாரங்கள், எமது மண்ணை ஆண்ட தமிழ்மன்னர்கள், அவர்கள் அந்நியப்படைகளோடு நிகழ்த்திய வீரஞ்செறிந்த போர்கள் பற்றிய அறிவூட்டல் இடம்பெறவேண்டும்.
2. தந்தை S.J.V செல்வநாயகம் பற்றிய பாடமும், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாடு, அங்கே சிங்கள அரசால் நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலை, தரப்படுத்தல் மூலமாக தமிழர்களின் கல்வியைப் பறித்தமை, “சிங்களம் மட்டும்” சட்டம் மூலம் தமிழ் மொழியை நசுக்கியமை பற்றிய விளக்கமான கட்டுரைகள் பாடமாக இடம்பெறவேண்டும்.
3. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களது ஆரம்பகால வரலாறு, போராட்டத்தைத் தலைவரது கைகளில் திணித்தது யார், என்பது பற்றியும், முறையே 1956, 1977, 1983 ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பற்றிய அறிவூட்டல் பாடநூல்களில் இடம்பெறவேண்டும்.
4. ஈழத்தமிழரின் தொன்ம வழிபாட்டு முறைமை, ஆலயங்கள், திருநாட்கள் பற்றிய அறிவூட்டல் இடம்பெற வேண்டும்.
5. ஈழத்தமிழர்களது கலை, விளையாட்டு, மரபுவழி நாட்டார் பாடல்கள், ஈழத்தமிழ்ப்புலவர்கள் பற்றிய செய்திகள் பாடநூல்களில் இடம்பெறவேண்டும்.
6. ஈழத்தமிழரின் இன மற்றும் அரசியல் விடிவிற்காகப் போராடிய தியாகதீபம் திலீபன், அன்னைபூபதி, மாமனிதர் துரைராஜா, தமிழ்வளர்த்த தாவீது அடிகளார், இன்ன பிற தமிழ்ப்பெரியவர்களின் வரலாறுகள் பாடமாக்கப்படவேண்டும்.
7. இந்திய இராணுவத்தால் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் பாடமாக்கப்படவேண்டும்.
8. சிங்கள அரசால் ஈழத்தமிழினப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டதன் காரணம், நிலப்பறிப்பு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , தொடர்ந்து இன்றுவரை நடைபெறும் இனஅழிப்பு, பாடங்களாக அடையாளப்படுத்தப்படுதல் வேண்டும்.
ஈழத்தமிழர்களது வரலாறு என்பது எப்போதும் போராட்டங்களால் நிரம்பியது. போராட்டங்களைத் தவிர்த்து எமதினத்தின் வரலாற்றை எழுதிவிட முடியாது. மேற்குறிப்பிட்ட விடயங்களை ஒவ்வொரு பாடமாக ஆண்டு 5 தொடக்கம் – ஆண்டு 11 வரை பாடமாகப் புகுத்துதல் அவசியமானது. இவையனைத்தும் பாடமாக்கப்பட்ட பின்னர், தமிழின விடிவிற்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தொண்டாற்றிய தமிழக அறிஞர்பெருமக்கள் பற்றிய கட்டுரைகளை இணைப்பது நன்று. மேற்காணும் வேண்டுகோளினை இனஉணர்வுடைய தமிழ்மக்களின் வேண்டுகோளாக ஏற்றுக்கொண்டு, தவறான பாடநூல்களை மீளப்பெற்று புதிய பாடநூல்கள் உருவாக்கப்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
ஈழத்தமிழர்களின் வரலாறையும், விடுதலை போராட்டத்தின் வரலாறையும், அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களையும், அதற்காக தங்களின் உழைப்பை கொடுத்த கல்விமான்கள், பொதுமக்களையும் சரியாக அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லாமல் தவிர்த்து விட்டால், அது ஈழத்தமிழர்களின் வரலாறாக இருக்கப்போவதில்லை. அதனை செய்வதை விடுத்து, அர்த்தமற்ற காரணங்களையும் வியாக்கியானங்களையும் கூறுவதில் நியாயமில்லை என்பதுடன் அது சரியான வழிகாட்டுதலாக இருக்கப்போவதுமில்லை.
தவறின் பெருமெடுப்பிலான எதிர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய முடிவிற்குள் உலகத்தமிழர்களைத் தள்ளுவதற்கும் நீங்களே காரணமாவீர்கள் என்பதனையும் மனவருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.!
உலகமெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர்கள்
ஒருங்கிணைப்பாளர்கள் :
லோ.வலன்ரையின்
தமிழ்க் கல்விக்கழக
வடமத்திய மாநில
முன்னாள் பொறுப்பாளர், முன்னைநாள் தமிழாலய நிர்வாகி மற்றும் ஆசிரியர், தமிழீழ விடுதலைச் செயற்பாட்டாளர்
ceelamtamils@gmail.com
ஆசிரியர் பொன் விசயகுமார்
முன்னாள் தமிழாலய நிர்வாகி
தமிழ்க் கல்விக்கழக
மாநிலச் செயற்பாட்டாளர்
ceelamtamils@gmail.com
கையெழுத்திடுவதற்கான இணைப்பு : http://chng.it/9ccDHTcxjx
WhatsApp பகிரியில் இருந்து பிரதி செய்யப்பட்டது.