உலக சமாதான ஒன்றியத்திற்கான தலைவர் மஹாகல் கடவல புண்ணியசார நாயக்க தேரர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை நேற்று (15) சினேகபூர்வமாக சந்தித்து உரையாடினார்.
புத்தளத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த 178 நாட்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (14) பிணையில் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் நேற்று (15) புத்தளத்திற்கு விஜயம் செய்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அஸார்தீன் முயினுடீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் தேசமான்ய இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, ரிஷாத் பதியுதீன் எம்.பியிடம் நலம் விசாரித்த மஹாகல் கடவல புண்ணியசார நாயக்க தேரர், குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி நீண்ட நாட்கள் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை வேதனையளிப்பதாகவும் கண் கலங்கிய நிலையில் தனது வருத்தத்தை தெரிவித்தார்.
இன நல்லிணக்கத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் சிறுபான்மை கட்சி ஒன்றின் தலைவரான தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு எதிராக தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்தோடு, இன மத பேதங்கள் பார்க்காமல், சகல மக்களுக்கும் தங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தனை பணிகளையும் தான் கௌரவமாக பார்ப்பதாகத் தெரிவித்த அவர், எவ்வித தடைகள் வந்தாலும் மன தைரியத்துடன் மேலும் முன்னோக்கிச் செல்லுமாறும் ஆலோசனை கூறினார்.
அத்துடன், எதிர்கால செயற்பாடுகளுக்கும் , சமூகங்களுக்கு இடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை பணிகளுக்கும் முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் உலக சமாதான ஒன்றியத்திற்கான தலைவர் மஹாகல் கடவல புண்ணியசார நாயக்க தேரர் , பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் கூறினார்.