மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் பேசியதாவது, மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்துடன் அத்துடன் முடிந்து விடும் என்பதே எனது நம்பிக்கை. அப்படியான இடத்திற்கு வழியை ஏற்படுத்தாது நாட்டையும் காப்பாற்றி நாட்டை முன்னெடுத்துச்செல்லுங்கள் என்பதே எமது கோரிக்கை.
எமது மாதுளுவாவே சோபித தேரர் உயிருடன் இருக்கும் போது, ஒருவரிடம் நாட்டின் அதிகாரத்தை வழங்காதீர்கள் என்ற வார்த்தையை கூறினார். இதன் மூலம் நாடு அழிவை நோக்கி செல்ல முடியும். அது தற்போது நடந்துள்ளது. ஒருவரிடம் அதிகாரங்களை கொடுத்து விட்டு, வேறு வேலைகளை தற்போது செய்கின்றனர்.
அமைச்சர் உதய கம்மன்பில் எரிபொருள் விலைகளை அதிகரித்த போது, இதனை செய்ய வேண்டாம், மக்களின் அதிருப்தி அதிகரிக்கும் என்று கூறி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் அதனை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
அதுதான்நிறைவேற்று அதிகாரம் என்பது. அப்படியில்லை என்றால், நிறைவேற்று அதிகாரத்தில் எந்த பயனுமில்லை என்றார். முருத்தெட்டுவே ஆனந்த தேரர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட பௌத்த பிக்குகளில் முதன்மையாக இருந்து செயற்பட்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.