எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
சந்திப்பில் அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளபோதும் , பதவி விலகுவதற்கு அவர் மறுத்துவிட்டதனால் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ளது.
இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் சுமூகதீர்வை எட்டும் நோக்கிலேயே மேற்படி அவசர சந்திப்பு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் , விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும், இ.தொ.காவினரும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பில் பங்கேற்பதற்கு முன்னர், 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சுயாதீன அணிகளின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் ராஜபக்சக்கள் இல்லாத அமைச்சரவையை உருவாக்கி – இடைக்கால சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி அப்பதவியில் கோட்டாபய ராஜபக்ச நீடிப்பதற்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. பின்னர் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின்போதும் இவ்விவகாரங்கள் தொடர்பில் அவருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இருந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அவசர அரசமைப்பு திருத்தம் அவசியமென்றும், அதனை மேற்கொண்ட பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி ஆராயலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்கான நகர்வுகள் சம்பந்தமாகவும் ஐக்கிய மக்கள் சக்தியால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுமானால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வக்கட்சி இடைக்கால அரசு பற்றி பரீசலிக்கலாம் என சஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
எனினும், இவை சம்பந்தமாக இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் , மீண்டும் சந்திப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.