ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கான வரிகளை உயர்த்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (04) மீண்டும் அச்சுறுத்தல் விடுத்தார்.
அதேநேரத்தில், புது டெல்லி அவரது தாக்குதலை “நியாயமற்றது” என்று கூறியதுடன், அதன் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதாக சபதம் செய்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பிளவை ஆழப்படுத்தியது.
இது குறித்த சமூக ஊடப் பதிவில் டரம்ப்,
இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் பெரிய இலாபத்திற்கு விற்கிறது.
உக்ரேனில் ரஷ்ய போரினால் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை.
இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன் – என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள புது டெல்லியின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர்,
இந்தியா அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது – என்றார்.
உக்ரேனுடனான 3-1/2 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவர மொஸ்கோ நடவடிக்கை எடுக்காவிட்டால், வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா மீதும் அதன் எரிசக்தி ஏற்றுமதியை வாங்கும் நாடுகள் மீதும் புதிய தடைகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
காலக்கெடு இருந்தபோதிலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான எந்த பொது அறிகுறியையும் காட்டவில்லை.
வார இறுதியில், இரண்டு இந்திய அரசாங்க வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை மீறி இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் என்று தெரிவித்தன.
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததிலிருந்து, மொஸ்கோவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ளுமாறு மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை இந்தியா எதிர்கொண்டுள்ளது.
ரஷ்யாவுடனான அதன் நீண்டகால உறவுகள் மற்றும் பொருளாதாரத் தேவைகளை மேற்கோள் காட்டி, புது டெல்லி இதை எதிர்த்தது.
ஜூலை மாதத்தில் ட்ரம்ப் ஏற்கனவே இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரிகளை அறிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு இடையூறாக நிற்கும் பல்வேறு புவிசார் அரசியல் பிரச்சினைகளை மேற்கோள் காட்டியுள்ளனர்.
வளரும் நாடுகளின் பரந்த பிரிக்ஸ் குழுவை அமெரிக்காவிற்கு விரோதமானது என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அந்த நாடுகள் அவரது குற்றச்சாட்டை நிராகரித்துள்ளன.
அந்தக் குழு அதன் உறுப்பினர்கள் மற்றும் வளரும் நாடுகளின் நலன்களை பெருமளவில் மேம்படுத்துவதாகக் கூறுகின்றன.
ரஷ்யாவிலிருந்து கடல்வழி மசகு எண்ணெயை வாங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு நாளைக்கு சுமார் 1.75 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 1% அதிகமாகும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.