ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியது : பயணிகள் யாரும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது. மீறி பட்டாசு எடுத்துச் செல்வது கண்டுப்பிடிக்கப்பட்டால், ரயில்வே சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
மின்சார ரயில்களில் கூட்ட நெருக்கடியால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிா்க்கவும், பட்டாசு எடுத்துச் செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்.30 முதல் நவ.5 வரை சென்னை புறநகா் மின்சார ரயில்களிலும், விழுப்பும், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்படும் ரயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புறநகா் ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் ரயில்வே பாதுகாப்பு படையினா் பாதுகாப்பு பணியில் இருப்பாா். ரயில் நிலையங்களின் நுழைவாயில்களில் ரயில்வே பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.