கொரோனா கட்டுப்பாடுகளுக்கிடையில் புனித ரமலான் மாதம் தொடங்கி, இஸ்லாமியர்கள் நோன்பைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். இந்த மாதங்களில் இவர்களின் உணவுப் பழக்கத்தில் தவறாமல் இடம்பிடிப்பது நோன்பு கஞ்சி. இதைப் பிற மதத்தினரும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போதைய சூழ்நிலையில் இஸ்லாமிய நண்பர்களின் இல்லங்களுக்குச் சென்று இந்தக் கஞ்சியை ருசிக்க முடியாதவர்கள், வீட்டிலேயே தயாரித்து இந்தச் சத்தான நோன்பு கஞ்சியை ருசிக்கலாம்.
என்ன தேவை?
பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் – 4
நறுக்கிய தக்காளி – ஒன்று
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பட்டை – ஒரு துண்டு
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் – சிறிதளவு
மட்டன் கீமா – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒன்றாகச் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்பு கையால் பலமுறை நன்கு நசுக்கி ஒன்றிரண்டாக உடைக்கவும். அதன் பின்னர் அதிலுள்ள தண்ணீரை வடித்துவிட்டு அரிசி, பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரைவைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துச் சூடாக்கவும். பின்னர் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். இத்துடன் மட்டன் கீமாவைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அத்துடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவையும் சேர்க்கவும். பின்னர் அரிசி, பாசிப்பருப்புக் கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி அதில் மூன்று கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். குக்கரை மூடி நான்கு விசில் வரும்வரை வேகவிடவும்.
குக்கரின் ஆவி இறங்கிய பின்னர் மூடியைத் திறந்து வெந்த கலவையுடன் மிளகுத்தூளைச் சேர்க்கவும். பிறகு இத்துடன் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்த்துக் கிளறவும். கடைசியாக மீண்டும் இந்தக் கலவையை அடுப்பில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
சைவ உணவுப்பழக்கம் கொண்டவர்கள் மட்டன் கீமாவுக்குப் பதிலாக சில கேரட் துண்டுகள் சேர்த்து இந்தக் கஞ்சியைத் தயாரித்து உண்ணலாம்.