எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகமான பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் நேற்றையதினம் (13-08-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
“ஜனாதிபதி ரணிலுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்சிக்கு (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) துரோகம் செய்ய முடியாது. இருக்கும் கட்சியிலேயே இருக்குமாறு ஊர் மக்கள் சொல்கிறார்கள்.
கட்சியின் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் தெளிவாக தெரியாமல் இருந்ததால்தான், ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்தேன்.
ஆனால், கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தியுள்ளதால் நிச்சயமாக கட்சியுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரத்தினபுரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.