சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரும், அவசரகால சட்டம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வாக்களிக்கவில்லை.
அரசாங்கம் எம்மிடம் கடந்த காலங்களில் கூறிய விடயங்களை செயற்படுத்தாத காரணத்தினால்தான், நாம் நேற்றைய வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. விசேடமாக சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் ஸ்தீரமாக வெளிப்படுத்தப்படவில்லை.
சர்வக்கட்சி அரசாங்கத்தில் நாம் இணைய வேண்டுமானால், 6 மாதத்திற்குள் ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். அதற்குள் எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.