யாழ் அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (29-06-2023) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதான மகேஸ்வரன் மயூரன், அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நேர் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் இருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விபத்தின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவில் படுகாயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடுமையான முயற்சித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
இருவரது குடும்பங்கள், உறவினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மற்றும் நண்பர்களின் அழுகையும் துயரமும் வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவுப் பகுதியை சில மணி நேரம் அவல உணர்வை ஏற்படுத்தியது.
வடபகுதியில் உந்துருளி பயணம் மிகவும் அபாயகரமான செயல். அதிகரித்த வேகம், கவனக்குறைவு, என பல தவிர்க்கபட வேண்டிய விடயங்களில் அக்கறை கொள்வதில்லை.
உந்துருளி பயணிக்கும் முன்னர் மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும். என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.