யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை 06.03 மணியளவில் துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார்.
இதன்போது அவரது இடுப்புக்குள்ளும் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வருகை தந்த நபர், தனிநபர் ஒருவரது பெயரை விசாரித்துவிட்டு, வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என அங்கு விசாரித்ததாக கூறப்படுகிறது.
கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு, பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு வந்தவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறித்த நபர் அங்கிருந்து சென்றதும், சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

