யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்பத்தி செய்து விநியோகித்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனிப் பாணி, எதனோல், எசன்ஸ் உள்ளிட்டவை உள்ளீடுகளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலப்பட மதுபானம் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது என்று மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் கலையகத்துக்கு அருகில் இயங்கி வரும் விடுதி ஒன்றிலேயே இந்த மதுபான உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் அங்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கலப்பட மதுபானத்துக்கு பயன்படுத்தப்பட்ட எதனோல், சீனி, எசன்ஸ் மற்றும் கால் மற்றும் முழுப் போத்தல்கள், உபகரணங்கள் என்பவை யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் உஜித் எம்.பி. லியனகேயின் கீழான மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.பிரதீப் தலைமையிலான அணியினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.