யாழ்ப்பாணம் – புத்தூரில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டவர்களில் 25 பெண்கள் உட்பட 31 பேர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பலரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50 இற்கும் மேற்பட்டோர் இருவரையும் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இரண்டு வீடுகளும் முற்றிலும் சேதமடைந்ததுடன் இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அச்சுவேலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற அடிப்படையில் 21 வயது தொடக்கம் 25 வயதான இளைஞர்கள் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,
இதன்போது வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த்தாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையம் ஊடாக சைபர் குற்றப் பிரிவில் 3 மாதங்களுக்கு முன்னர் முறையிட்ட நிலையில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படாமையே குறித்த வன்முறைக்கு காரணம் என தெரியவருகிறது.
அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதேவேளை, வீடுகளுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.
காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வன்முறை சம்பவம் தொடர்பிலான மேலும் பலரை கைது செய்ய அச்சுவேலி பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.