யாழில் பல உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படுவதால் நுகர்வோரை பாதுகாப்பதற்காக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாட்டிலே ஏற்பட்ட கொவிட் தொற்று நோய்க்கு பின்னர் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “தற்போது எரிவாயு உட்பட உணவுப் பொருட்கள் கடந்த காலத்தை விட விலை குறைப்பு செய்யப்பட்ட நிலையில் உணவகங்களில் இன்னும் உணவு பொருட்களின் விலைகளைக் குறைக்காத நிலைமையே காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாது திருநெல்வேலி மற்றும் யாழ். நகரத்தை அண்டிய பகுதிகளில் அதிகளவிலான மக்கள் உணவகங்களுக்கு செல்லும் நிலையில் பல உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தாமல் காணப்படுகிறது.
இலங்கையில் நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக பல சட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் நுகர்வோரை பாதுகாப்பதற்காக விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களில் விலை பட்டியல் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை சட்டம் கூறுகிறது.
ஆனாலும் யாழ். மாவட்டத்தில் இயங்குகின்ற பல உணவகங்களில் விலை பட்டியல் காட்சிப்படுத்தப்படாத நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
ஆகவே நுகர்வோர் நியாய விலையில் தமக்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதை உறுதிப்படுத்த பாவனையாளர் அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.