யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு கையாளும் நிலையங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர் ப. தினேஷ் தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு கையாளும் நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன் போது , சுகாதார சீர்கேட்டுடனும் , சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு கையாளும் ஐந்து நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு தொடரப்பட்ட போது உணவு கையாளும் நிலையங்களின் ஐந்து உரிமையாளர்களும் மன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.
அதனை அடுத்து அவர்களை எச்சரித்த மன்று ஐவருக்கும் 70 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
அதேவேளை பருத்தித்துறை நகர சபை ஆளுகைக்குள் உட்பட்ட உணவு கையாளும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராகவும் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் போதுஉணவு கையாளும் நிலையங்களின் 04 உரிமையாளர்கள் மன்றில் தோன்றி தம்மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை எச்சரித்த மன்று அவர்களுக்கு 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அன்றைய தினம் மன்றிற்கு சமூகமளிக்காத உணவு கையாளும் நிலைய உரிமையாளருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் சமூகமளிக்குமாறு அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.