யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில் மிதந்து கரையொதுங்கிய மதுபானம் என நம்பப்படும் ஒருவகைப் பானத்தை அருந்திய ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை குறித்த போத்தில் கரையொதுங்கியதாகவும் அதனை எடுத்து 20 வரையானோர் பருகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தினை அடுத்து உடல் நிலைப் பாதிப்பினை எதிர்கொண்ட ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஸ்ரீகுமார் (46) என்று தெரியவந்துள்ளது.
சடலம் ஆதாரவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை அடுத்து சிலர் தாமாகவே வைத்தியசாலைக்குச் சென்று தம்மை பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் குறித்த போத்திலும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.