யாழ்ப்பாணம் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை உடனடியாகக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்டச் செயலர் க.மகேசனுக்கு, பிரதமர் அலுவலகத்திலிருந்து நேற்றுக் கடிதம் அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவுக்குப் பிரதமர் அலுவலகப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீதநாத் காசிலிங்கத்தின் ஒப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிடுகையில்,
‘சுபிட்சத்தின் நோக்கு’ கொள்கைத்திட்டத்தின் பிரகாரமும் 2022ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தி உச்ச பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் 2022ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைக் கிரமமாக நடத்துவதற்கான முக்கியத்துவத்தின் பால் தங்களின் மேலான கவனத்தை ஈர்க்கின்றேன்.
அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டிற்கான நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்களுக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி பெறுவதற்காகப் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்கு ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.