இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களை மோதவிட்டு ராஜபக்ச அரசு வேடிக்கை பார்க்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையிலும் ராஜபக்ச அரசு அரசியல் இலாபம் தேடுகின்றது. அதனால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் இந்த அரசு பின்னடிக்கின்றது.
நாட்டின் நலன் கருதி – வடக்கு கரையோர மக்களின் நன்மை கருதி இந்திய அரசுடன் இது தொடர்பில் அரசு பேச்சு நடத்த வேண்டும். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலால் வடக்கு கடல் வளம் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
வடக்கு கடற்றொழிலாளர்களின் உணர்வுமிக்க போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.