இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.
அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.
காற்றாலை மின்சாரத் திட்டங்களை இந்திய அதானி குழுமத்துக்கு வழங்குமாறு தமக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அழுத்தம் கொடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மிடம் தெரிவித்ததாக பெர்டினாண்டோ இந்த விசாரணையின் போது தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதன்பின்னர் சில மணித்தியாலங்களில், தாம் கோப் குழுவில், ஜனாதிபதி கோட்டாபயவை பற்றி கூறிய கருத்துக்கள் பொய்யானவை என்றும் உணர்ச்சிவசப்பட்டு, அவ்வாறு கூறியதாகவும் பெர்டினாண்டோ குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் அவர் கோப் குழுவை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தி வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதேநேரம் பாரதீய ஜனதாக்கட்சியின் அழுத்தம் இந்தியாவை கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த செய்திகளின் இறுதிக்கட்டமாகவே மின்சார சபையின் தலைவர் பதவி விலகியுள்ள தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.