கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் உயிரிழந்த விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் இந்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியில் திரிவிக்ரமன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மகள் விஸ்மயா (26) கொல்லத்தில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் விஸ்மயாவுக்கும் சூரநாட்டைச் சேர்ந்த கிரண்குமாருக்கும் கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி திருமணம் நடந்தது. கிரண்குமார் மோட்டார் வாகன துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம், 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் மதிப்பிலான காரும் வழங்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பின்னரும் கூடுதல் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை கிரண்குமார் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
தனக்கு நல்ல கார் வாங்கி தரவில்லை என்று கூறி அடித்து சித்ரவதை செய்து வந்த நிலையில், விஸ்மயா தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இந்த விவகாரம் கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமார் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்து இன்று தண்டனை அறிவிக்கபட்டது. கேரளா வரதட்சணை கொடுமை வழக்கில் விஸ்மயா கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கொல்லம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
தண்டனையை கிரண்குமாருக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.என்.சுஜித் அறிவித்தார். ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்ததுடன் அதில் ரூ.2 லட்சத்தை பெண்ணின் பெற்றோருக்கு தரவும் ஆணை பிறப்பித்துள்ளது.
அதேவேளை குறித்த வழக்கு ஒரு வருடத்திற்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.