முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான 6 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்தின் கீழ் கொண்டு வரும் இரகசிய முயற்சி வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் (P. S. M. Charles) ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுபட்டுவருவதாக குறித்த கிராமங்களை சேர்ந்த மக்களை கவலை தெரிவித்துள்ளனர்.
தமது காணிகளை மகாவலி அதிகாரசபையிடம் வழங்க சம்மதம் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் எழுத்துமூல அறிவித்தலும் வழங்கி விட்டது என்பதனை அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
மகாவலி அதிகாரசபைக்கு முல்லைத்தீவின் ஒரு பகுதியை வழங்குவது தொடர்பான உயர்மட்ட கூட்டம்- பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கி- வடக்கு ஆளுனர் தலைமையில், மிகமிக இரகசியமாக சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டுள்ளது.
வடமாகாண ஆளுனர் செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், வடக்கு ஆளுனர், வடக்கு பிரதம செயலாளர், காணி திணைக்களம், மகாவலி அதிகாரசபையின் எல் வலய முகாமையாளர், வெலிஓயாவை சேர்ந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வடமாகாண நிர்வாக அதிகாரத்தின் கீழ் உள்ள இந்த நிலங்களை, சத்தம் சந்தடியின்றி, மகாவலி அதிகாரசபையிடம் ஒப்படைப்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்.
இந்த 6 கிராம சேவகர் பிரிவுகளையும் மகாவலி எல் வலயத்தில் இணைப்பதற்கான முயற்சி அண்மைய சில காலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வெளியானதும், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு கடிதமொன்றை மாகாவலிக்கு பொறுப்பான அமைசர் சமல் ராஜபக்சவிடம் (Chamal Rajapaksa) கையளித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக அவருடன் கலந்துரையாடலொன்று நடைபெற்று , இந்த வேலை திட்டம் மேற்கொண்டு முன்னெடுக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடக்கு ஆளுனரின் ஊடாக மீண்டும் இந்த திட்டம் கையிலெடுக்கப்பட்டுள்ளது.
கொக்குளாய் கடல் நீரேரி தொடக்கம் நாயாறு நீரேரி வரையான ஒடுங்கிய- வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் இணைப்பு பகுதியாக அமைந்துள்ள 6 தமிழ் கிராம சேவகர் பகுதிகளை மகாவலி எல் வலயத்திற்குள் இணைப்பதன் பின்னணியில், தமிழர் தாயக கோரிக்கையை நிரந்தரமாக வலுவிழக்கச் செய்யும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தமிழ் அரசியல் கட்சிகளும், புத்திஜீவிகளும் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தனர்.
தேர்தல் நடைபெற்று மாகாணசபை ஆட்சி அமைந்தால், அதன் பின்னர் மாகாணசபை அந்த காணி நிர்வாகத்தை கையளிக்காது என்பதால், அரசின் பிரதிநிதியான ஆளுனரின் மூலம் தற்போதே தேவையான காணிகளை கைமாற்றி விடுவதே அரசின் திட்டமென்பதே, தமிழ் அரசியல் கட்சிகளின் விமர்சனமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், பௌத்த பிக்குகளையும் அழைத்து, அரச நிர்வாக கூட்டமொன்றை வடக்கு ஆளுனர் நடத்தி காணிகளை கையளிக்கும் சம்மதத்தை வழங்கியுள்ளார்.
கொக்கிளாய் கிழக்கு ,கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத் தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு ஆகிய தமிழ் கிராமங்களே இவ்வாறு மகாவலி எல் வலயத்துக்குள் இணைக்கப்பட்டு மகாவலி அதிகார சபையின் நிர்வாக வரம்புக்குள் உள்வாங்கும் வேலைகள் இடம்பெருவருகின்றது.
இந்த தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகளிலேயே சர்ச்சைக்குரிய கொக்குளாய் விகாரை, தமிழ் மக்கள் தமது பாரம்பரிய உரித்திற்காக தொடர்ந்து போராடி வரும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என்பனவும் பாரிய இராணுவ முகாம்களும் இந்த நிலப்பகுதிக்குள்ளேயே வருகின்றன.
நீராவியடி பிள்ளையார் ஆலயம் பிரதேச செயலகத்தின் காணி அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளதாலேயே இதுவரை தமிழ் மக்கள் அதை உரிமை கோரவும், வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிந்துள்ளது என்றும், மகாவலி அதிகாரசபையின் கீழ் அவை சென்றால், அந்த நிலைமை இருக்காது என்றும் தமிழ் அரசியல் கட்சிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் எல்லையில் உள்ள மணலாறு தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து வெலிஓயா ” என்று பெயர் மாற்றி சம்பத்நுவர என்ற பிரதேச செயலகத்தை உருவாக்கி மகாவலி அதிகாரசபையின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் இப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு பூரண சிங்கள பகுதியாக மாற்றப்பட்டுவருவதோடு எதிர்காலத்தில் வடமத்திய மாகாணத்தோடு இணைக்கப்பட்டு வெலிஓயா தனி சிங்கள மாவட்டம் ஒன்றினை உருவாக்கி வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலத்தொடர்பை சிதைக்கும் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்டுகிறதோ எனவும் குறித்த பிரதேச தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.