முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பல்வேறு தலைநகரங்களுக்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட சில இலங்கை தூதுவர்கள் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் மாற்றப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள வெற்றிடங்களை பெரும்பாலும் தொழில் இராஜதந்திரிகளைக் கொண்டு நிரப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் இதன்போது இராஜதந்திர சேவையில் 16 வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றில் 12 பதவிகளுக்கு வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரிகளைக் கொண்டு நிரப்பவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக அப்போது நியமிக்கப்பட்ட சி.ஏ.சந்திரபிரேமவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அவருக்குப் பதிலாக நேபாளத்தில் பணியாற்றிய தொழில் இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக்க ஜெனீவாவுக்கு அனுப்பப்படவுள்ளார்.
பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹனவின் அனுபவம் இந்த நேரத்தில் முக்கியமானது என்பதால் அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் சிறப்பாக பணியாற்றி வருவதால் அவர் மாற்றப்பட மாட்டார் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பணியமர்த்தப்படும் புதிய தூதுவர்களில், இரண்டு முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் அடங்குகின்றனர்.
அந்த வகையில் சித்ராங்கனி வாகீஸ்வர அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராகவும், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே, இந்தோனேசியாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் மனிஷா குணசேகர பிரான்ஸூக்கும், எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. மெண்டிஸ் பஹ்ரைனுக்கும், ஏ.எஸ்.யு. மெண்டிஸ் வியட்நாமுக்கும், வருணி முத்துக்குமரன ஜெர்மனிக்கும், கபில ஜயவீர லெபனானுக்கும், எம்.எச்.எம்.என். பண்டார இஸ்ரேலுக்கும், கே.கே.தெஷாந்த குமாரசிறி எத்தியோப்பியாவுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
இதுதவிர, சானக எச். தல்பஹேவா பிலிப்பைன்ஸூக்கும், பிரியங்கிகா விஜேகுணசேகர ஜோர்தானுக்கும், பி. காண்டீபன் குவைத்துக்கும், உதய இந்திரரத்ன ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும், சந்தித் சமரசிங்க மெல்பர்னுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.