முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பிய போது, விமான நிலைய செயற்பாடுகளுக்கான கட்டணங்கள் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினால் செலுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் விளக்கமளித்து பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளதாவது,
ஊடக அறிக்கை
தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பினார்.
அவர் நாடு திரும்பியதற்குரிய விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் போலியான தகவல்கள் வெளியிடப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நாடு திரும்பிய பஷில் ராஜபக்ஷ சட்ட ரீதியாகவே விமான நிலைய வளாகத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்.
சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் ஆவணங்களுக்கமைய இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பஷில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் நுழைவாயிலைப் பயன்படுத்தியுள்ளார்.
அதோடு , அதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு 400 டொலர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளார்.
மேலும் அவரை வரவேற்பதற்காக சென்றவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்திற்கும் பஷில் தரப்பினர் உரிய கட்டணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்த கட்டணத்தை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் செலுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.