கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
82 வயதுடைய ஜாங் என்ற பெண்ணே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த குறித்த மூதாட்டி, தவளைகளை உயிருடன் விழுங்குவதன் மூலம் முதுகுவலியை குறைக்க முடியும் என ஒரு சித்த மருத்துவர் கூறியதை நம்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல், 3 தவளைகளை முதல் நாள் விழுங்கியதாகவும், இரண்டாவது நாள் மேலும் 5 தவளைகளை விழுங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பின்னர், ஆரம்பத்தில் வயிற்றில் சிறிது அசௌகரியத்தை உணர்ந்ததாகவும், அடுத்த சில நாட்களில் வலி தீவிரமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலி மிகவும் அதிகமானதை தொடர்ந்து தவளைகளை விழுங்கியதை ஜாங் தனது குடும்பத்தினரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான வயிற்று வலி காரணமாக செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சோதனைகளில் ஜாங்கின் உடலில் ஸ்பார்கனம் உள்ளிட்ட ஒட்டுண்ணிகள் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தவளைகளை விழுங்கியதன் காரணமாக அந்த பெண்மணியின் செரிமான அமைப்பை சேதப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், தவளைகளை விழுங்குவதோடு மட்டுமல்லாமல், சிலர் பாம்பு பித்தம் அல்லது மீன் பித்தத்தை உட்கொள்கிறார்கள்,
இத்தகைய வினோதமான, அறிவியல் பூர்வமற்ற சிகிச்சைகள் சீன சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.